கொரோனா பரவலை தடுக்க வாக்காளர்கள் கையுறை பயன்படுத்தியே வாக்களிக்க வேண்டும்

வாக்காளர்கள் கையுறை பயன்படுத்தியே வாக்களிக்க வேண்டும்.

Update: 2021-03-27 19:23 GMT
கரூர்
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் வாக்காளர்கள் பயன்படுத்த உள்ள தடுப்பு உபகரணங்களை கரூர் நகரத்தில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி நேரில் பார்வையிட்டு வாக்குச்சாவடி வாரியாக பிரித்து அனுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 4,31,934 ஆண் வாக்காளர்களும், 4,64,699 பெண் வாக்காளர்களும், 80 இதர வாக்காளர்களும் என மொத்தம் 8,96,713 வாக்காளர்கள் உள்ளனர்.
கையுறை பயன்படுத்த வேண்டும்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வலது கையில் உபயோகப்படுத்தும் கையுறை வழங்கப்படவுள்ளது. வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவருமே கையுறையினை பயன்படுத்தியே பதிவேடுகளில் கையொப்பமிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் கையுறையினை பயன்படுத்தியே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கினை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அனைத்து வாக்காளர்களும், முகவர்களும் முககவசம் அணிந்தே வாக்குச்சாவடிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் அணியாமல் வரும் வாக்காளர்களுக்கு வழங்கிட தேவையான அளவு முககவசம் இருப்பு வைக்கப்படவேண்டும் என்ற தேர்தல் ஆணையம் உத்தரவின் அடிப்படையில், தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
வெப்பநிலை 99 பாரன்ஹீட், 37.20 செல்சியஸ் வரை இருப்பின் அனுமதிக்க வேண்டும். மாறாக வெப்பநிலை அதிகமாக இருப்பின் மீண்டும் இடைவெளிவிட்டு இரு முறை வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதும் வெப்பநிலை அளவு அதிகமிருப்பின் வாக்காளரை வாக்குப்பதிவு செய்ய டோக்கன் கொடுத்து வாக்கு பதிவு முடியும் நேரத்தில் கோவிட் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி அனுமதிக்க வேண்டும். முகவருக்கு வெப்பநிலை அதிகமிருப்பின் மாற்று முகவரை அனுமதிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு அலுவலர்கள்
வாக்குப்பதிவு அலுவலர்கள், சுகாதார சேவை வழங்குனர், பாதுகாவலர் உள்ளிட்ட 10 அலுவலர்களுக்கு முககவசம், சானிடைசர் மருத்துவ கழிவுகளை சேகரிப்பதற்காக பச்சை நிற குப்பைத்தொட்டி வழங்கப்படும். இதில் மஞ்சள் நிற கவரை பொருத்திட வேண்டும். பயன்படுத்திய முககவசம், கையுறை மற்றும் பிபிஇ கிட் மட்டுமே இத்தொட்டியில் சேகரிக்கப்படவேண்டும். 
இக்கழிவுகளை சேகரித்து செல்ல தனிவாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேப்பர் கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை சேகரிக்க ஊதா நிற தொட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் கரூர் நகரப்பகுதியில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்