திருச்சி தனியார் பள்ளியை பெற்றோர் திடீர் முற்றுகை

கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-29 20:07 GMT
திருச்சி, மார்ச்.30-
கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி
திருச்சி பாரதி நகர் 13-வது குறுக்குத் தெருவில் காவேரி குளோபல் சீனியர் செகண்டரி பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் ஒரே வளாகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளியும், மெட்ரிக் பள்ளியும் இயங்கி வருகிறது.
சி.பி.எஸ்.இ.பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பருவத்திற்கு சுமார் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. 2- வது பருவத்திற்கும் அதே தொகை அளவில் செலுத்த வேண்டியது வரும்.
முறைகேடு என குற்றச்சாட்டு
இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டாக கொரோனா நோய் தொற்று பரவலால் பள்ளிகள் செயல்படாமல் இருக்கும் நிலையில் தற்போது ஆய்வக கட்டணம், விளையாட்டு கட்டணம், மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி கட்டணம் இன்னும் பிற இதர கட்டணங்களும் முறைகேடாக வசூலிக்கப்படுவதாக பெற்றோர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.
நேற்று பள்ளி நிர்வாகம் தரப்பில் ‘பெற்றோர் சந்திப்பு' என கூறி அழைத்துள்ளனர். அப்போது, அவர்களிடம் கட்டணம் செலுத்துவதற்கான வங்கியின் செலானை வழங்கியதாக கூறப்படுகிறது.
பள்ளி முற்றுகை
அப்போது பெற்றோர் தரப்பில், கடந்த ஓர் ஆண்டாக ஆன்-லைன் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வரும் நிலையில் டியூசன் கட்டணம் தவிர இதர கட்டணமாக டெவலப்மெண்ட் கட்டணம், கம்யூட்டர் கட்டணம், விளையாட்டு மற்றும் இதர கட்டணம் என தனித்தனியாக தொகை செலானில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இந்த முறை தனித்தனியாக பிரித்து காட்டாமல் மொத்தமாக டியூசன் கட்டணம் என முதல் பருவ கட்டணம் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
எனவே, அவ்வாறு முழுத்தொகையும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க கூடாது என்றும், உண்மையான டியூசன் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகம், நாங்கள் கேட்கும் கட்டணத்தை தர வேண்டும், இல்லையென்றால் மாற்றுச்சான்றிதழ் வாங்கி கொள்ளுங்கள் என கூறினராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
75 சதவீத கட்டணம்
இது குறித்து பெற்றோர் தரப்பில் நந்தினி, அழகு பேச்சி ஆகியோர் கூறும்போது, கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூல் செய்கிறார்கள். அரசு விதிப்படி ஆன்லைன் வகுப்பு மட்டும் நடப்பதால் 75 சதவீத கட்டணம்தான் வசூலிக்க வேண்டும். ஆனால் பள்ளி நிர்வாகம் தரப்பில் முழு கட்டணமும் கட்ட சொல்கிறார்கள். விவரம் கேட்டால் டி.சி. வாங்கி கொண்டு உங்களுக்கு பிடித்த பள்ளியில் குழந்தைகளை சேர்த்து கொள்ளுங்கள் என கூறுகிறார்கள். எனவே, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கோர்ட்டு என்ன சொல்கிறது?
கொரோனா காலம் முடியும் வரை 35 சதவீத தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், மீதமுள்ள 40 சதவீத தொகையை ஆகஸ்டு மாதம் வசூலிக்கலாம் என்றும், 75 சதவீதம் மட்டுமே கட்டணம் நிர்ணயித்து ஏற்கனவே ஐகோர்ட்டு அனைத்து தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் வேளையில், டியூசன் கட்டணம் தவிர இதர கட்டணங்களையும் செலுத்த சொல்வது ஏற்புடையது அல்ல என்றும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்