தேனி அருகே, தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் பரபரப்பு: பா.ஜ.க. மாவட்ட செயலாளருடன் அ.தி.மு.க. நிர்வாகி அரிவாளுடன் தகராறு

தேனி அருகே, அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் பா.ஜ.க. மாவட்ட செயலாளருடன் அ.தி.மு.க. நிர்வாகி அரிவாளுடன் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-04-02 15:56 GMT
தேனி :
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் போடி சட்டமன்ற தொகுதிக்கான அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தேர்தல் பணி சம்பந்தமாக அ.தி.மு.க. மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பா.ஜ.க. மாவட்ட செயலாளராக உள்ள பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெருவை சேர்ந்த மனோகரன் என்பவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது அ.தி.மு.க. பழனிசெட்டிபட்டி பேரூர் முன்னாள் செயலாளர் முருகேசன் அங்கு வந்தார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது முருகேசன் ஒரு அரிவாளை எடுத்து வந்து மனோகரனிடம் தகராறு செய்தார். அப்போது அங்கிருந்த சிலர் அரிவாளால் தாக்கவிடாமல் முருகேசனை தடுத்து நிறுத்தி அவர்களை விலக்கி விட்டனர். இதற்கிடையே அரிவாளுடன் முருகேசன் தகராறு செய்த காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாக பரவியது.
வழக்குப்பதிவு
இந்நிலையில் சம்பந்தப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி மனோகரன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், "எனக்கு சொந்தமான இடத்தில் உள்ள பாதையில் முருகேசன் தகரத்தை கொண்டு மறைத்தார். அதுகுறித்து கேட்டபோது செங்கலை கொண்டு என் மீது எறிந்தார். இதில் எனது இடது காலில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் அரிவாளுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்தார்" என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் முருகேசன் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாட்ஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு அலுவலகம் முன்பு அரிவாளுடன் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. நிர்வாகி இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்