நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தகவல்

Update: 2021-04-03 18:49 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.1 கோடி பறிமுதல்
தமிழகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் நடைமுறைகளை மீறி வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தல், பொருட்கள் வழங்குதல், மதுபானம் வினியோகித்தல் மற்றும் டோக்கன் வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி ரொக்கம், மதுபானம் 1,084 லிட்டர், 7 கிலோ வெள்ளி, ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள வேட்டி, சேலை, துண்டு ஆகியவை பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு படையினரால் பறிமுதல செய்யப்பட்டு உள்ளது.
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
இதுபோன்ற செயல்கள் தொடர்பாக தகவல் கிடைத்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 94981 11190 என்ற எண்ணிலும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு (தேர்தல்) 94981 70263 என்ற எண்ணிலும், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு 90801 05990 என்ற எண்ணிலும், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 04286-280999 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சட்டமன்ற தேர்தலை நேர்மையான முறையில் நடத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
======

மேலும் செய்திகள்