வாக்காளர்களின் தாகம் தீர்க்க மண்பானைகள் தயார்

வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களின் தாகம் தீர்க்க மண்பானைகள் தயார் நிலையில் உள்ளன.

Update: 2021-04-04 19:06 GMT
காரைக்குடி,

வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களின் தாகம் தீர்க்க மண்பானைகள் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் பணி தீவிரம்

தமிழகத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நேற்று இரவுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
 வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை, பூத் சிலிப், நூல், ரப்பர் ஸ்டாம்பு, கிருமிநாசினி, முக கவசம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகள் தனித்தனியாக பிரித்தெடுத்து வைக்கப்பட்டு உள்ளது. அந்தந்த தொகுதி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், அதற்கான பொருட்கள் அடங்கிய பைகள் இன்று காலை 8 மணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மண்பானைகள் தயார்

தேர்தல் வாக்கு பதிவு நேரத்தில் கடுமையான அனல் காற்று வீசுவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையத்திலும் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் குளுமையான தண்ணீர் குடிப்பதற்காக மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து திருகு பொருத்தப்பட்ட மண்பானைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டு தொகுதி வாரியாக அனுப்பப்பட்டு உள்ளது. 
காரைக்குடி தொகுதியை பொறுத்தமட்டில் 443 வாக்குச்சாவடி மையம் உள்ளதால் 500 மண்பானைகள் வரை வந்து இறங்கி உள்ளது. இந்த மண்பானைகள் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மின்னணு வாக்கு எந்திரத்துடன் சேர்த்து இந்த மண்பானையும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வாக்காளர்களின் தாகம் தீர்க்க இந்த மண்பானை தண்ணீர் உதவும்.

மேலும் செய்திகள்