கோவில்பட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல்

கோவில்பட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-07 12:15 GMT
கோவில்பட்டி:
 நெல்லை மாவட்டத்தில் இருந்த கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பிர்கா கடந்த 2008-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அப்போது சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து கோவில்பட்டி வட்டத்துக்கு அனைத்து துறைகளும் மாற்றப்பட்டு விட்டன. ஆனால், உள்ளாட்சித்துறை மட்டும் மாற்றப்படவில்லை. இதனால், இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 ஊராட்சிகளும், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலேயே உள்ளன. இதனால் இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர், தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன்படி நேற்று முன்தினம் காலையில், பழைய அப்பனேரி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் சாலையில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 
இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு திரண்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் புறக்கணிப்பு என்பதில் மக்கள் உறுதியாக இருந்ததால், வாக்களிக்க விரும்புபவர்களை தடுக்கக்கூடாது. அனைவரும் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இளையரசனேந்தல் குறுவட்டத்துக்கு உள்பட்ட எஞ்சிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுகள் வழக்கம் போல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்