ஆவூர் புனித பெரியநாயகி அன்னை ஆலய பாஸ்கா விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 11-ந்தேதி தேர்பவனி நடக்கிறது

ஆவூர் புனித பெரியநாயகி அன்னை ஆலய பாஸ்கா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2021-04-07 18:33 GMT
ஆவூர்:
விராலிமலை அருகே ஆவூரில் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் உள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் புனித வெள்ளிக்கு அடுத்து வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பாஸ்கா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாஸ்கா முதல் நாள் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சப்பர பவனி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று இரவு 10.30 மணியளவில்  ஆண்டவரின் உயிர்ப்பு பாஸ்கா நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து மறுநாள் அதிகாலை வாணவேடிக்கையுடன் கூடிய சப்பரபவனி நடைபெற உள்ளது. தொடர்ந்து 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)  மதியம் ஒரு மணியளவில் உயிர்த்த ஆண்டவரின் பெரிய தேர்பவனி நடைபெற உள்ளது. திருச்சி புத்தூர் பங்குத் தந்தையும், மறைவட்ட அதிபருமான மைக்கில்ஜோ கலந்து கொண்டு தேரை புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைக்கிறார். தேர் திருவிழாவையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருச்சி, இலுப்பூர், கீரனூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ் தலைமையில் இருபால் துறவிகள், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்