விவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை- பணம் கொள்ளை

சின்னசேலம் அருகே விவசாயி வீட்டில் ரூ. 3½ லட்சம் நகை -பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-04-08 17:42 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் அருகே கனியாமூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48) விவசாயி, இவரது மனைவி கவுரி.  இவர்களுக்கு நிவேதா (25) என்ற மகளும், பிரவீன்குமார் (23) என்ற மகனும் உள்ளனர். நிவேதாவுக்கு திருமணம் முடிந்து தனது கணவர் பாலமுருகனுடன் விழுப்புரம் அருகே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிவேதா தனது மகன் பிரகதீசுடன் கனியாமூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு ஓட்டு போட்டு விட்டு தனது தாய் வீட்டிலேயே அவர் தங்கினார். 
நேற்று முன்தினம் இரவு நிவேதா தனது மகனுடன் வீட்டில் படுத்து தூங்கினார். காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்த நிலையில் வைத்து விட்டு  வாசலில் சீனிவாசன், கவுரி, பிரவீன்குமார் ஆகியோர் தூங்கினர்.

ரூ.1 லட்சம் ரொக்கம்

 இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் சீனிவாசனின் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 3½ பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.  பின்னர் அவர்கள் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த நிவேதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு பின்பக்க கதவை திறந்து ஓடினர். இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சீனிவாசன் குடும்பத்தினர் திருடன், திருடன் என கூச்சலிட்டனர்.
 அந்த சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

வலைவீச்சு

 இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி தணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன்,  சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு கைரேகை பதிவுகளை பதிவு செய்தார்.
 இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கனியாமூர் கூட்டுசாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைபோன நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்