பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள், ரூ.85¼ லட்சம் உண்டியல் காணிக்கை

பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.85¼ லட்சம் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Update: 2021-04-08 21:43 GMT
சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.85¼ லட்சம் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 
பண்ணாரி அம்மன் கோவில்
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த குண்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு குண்டம் விழா நடைபெறவில்லை. 
இந்த ஆண்டு குண்டம் விழா நடைபெற்றது. ஆனால் குண்டம் விழாவில் கோவில் பூசாரிகள் மட்டுமே தீ மிதிக்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 
பண்ணாரி அம்மன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்த நிலையில் நேற்று 28 நாட்களுக்கு பிறகு கோவில் வளாகத்தில் உள்ள 12 உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.  
ரூ.85¼ லட்சம்
இந்து அறநிலையத்துறை துணை ஆணையாளர் (பொறுப்பு) சபர்மதி, ஈரோடு உதவி ஆணையாளர் அன்னக்கொடி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் கோவில் அறங்காவலர்கள், பணியாளர்கள், திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.85 லட்சத்து 20 ஆயிரத்து 35-ஐ பக்தர்கள் காணிக்கையாக ெசலுத்தி இருந்தனர். மேலும் 511 கிராம் தங்கம், 933 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 

மேலும் செய்திகள்