மாமல்லபுரத்தில் மின்சாரம் தாக்கி சிற்பக்கலைஞர் சாவு

மாமல்லபுரத்தில் கல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் சிற்பம் வடிக்கும்போது மின்சாரம் தாக்கி சிற்பக்கலைஞர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-09 05:42 GMT

சிற்ப கலைஞர்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் திருக்கழுக்குன்றம் சாலையை சேர்ந்தவர் செல்வமணி (வயது 57). மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலை கல்லூரியில் பட்டம் பெற்ற கற்சிற்ப கலைஞரான இவர் மாமல்லபுரம் ஐந்துரதம் சாலையில் கற்சிற்ப உற்பத்தி மற்றும் விற்பனை கூடம் அமைத்து சிற்பங்கள் வடிவமைத்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு தேவையான கற்சிலைகள் இங்கிருந்து அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.

மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோவில் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்தார்.

மின்சாரம் தாக்கி சாவு

இவர் நேற்று வழக்கம் போல் சிலை வடித்து கொண்டிருக்கும்போது கல் அறுக்கும் எந்திரத்தின் வயர் அறுந்து அவரது உடலில் மின்சாரம் தாக்கிறது. இதில் துக்கி வீசப்பட்ட அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு மாமல்லபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் மாமல்லபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து மாமல்லபுரம் ஐந்துரதம் சாலையில் உள்ள சிற்பக்கலை கூடங்கள் நேற்று அடைக்கப்பட்டன. மாமல்லபுரம் சிற்பிகள் அனைவரும் கறுப்பு பாட்ஜ் அணிந்து அவரது மறைவுக்கு துக்கம் அனுசரித்தனர். மேலும் மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோவிலில் நேற்று வழிபாடு ரத்து செய்யப்பட்டு நடைமூடப்பட்டது.

மேலும் செய்திகள்