ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீர் மே முதல் வாரத்தில் திறக்கப்படுகிறது; மாதம் 1 டி.எம்.சி. வழங்க இருப்பதாக அதிகாரிகள் தகவல்

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருகிற மே மாதம் கிருஷ்ணா நதிநீர் திறக்கப்படுகிறது. ஆந்திர மாநில அரசு மாதம் 1 டி.எம்.சி. வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க இருப்பதாக பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-04-09 06:22 GMT
கிருஷ்ணா நதிநீர்
சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் என மொத்தம் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.அதன்படி கடந்த ஆண்டு முதல் தவணையாக 2 டி.எம்.சி. தண்ணீரை மட்டும் தமிழகத்துக்கு ஆந்திர அரசு வழங்கியுள்ளது. அதன்பிறகு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் தற்போது வரை 20 கன அடி மட்டுமே தண்ணீர் வருகிறது.சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி (11.7 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் உள்ள நீர் இருப்பு விரைவாக குறைந்து வருகிறது.

நீர் இருப்பு குறைவு
நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 1,810 மில்லியன் கன அடியாகவும் (1.8 டி.எம்.சி.), 881 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 754 மில்லியன் கன அடியாகவும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் இருப்பு 3 ஆயிரத்து 20 மில்லியன் கன அடியாகவும் (3 டி.எம்.சி.), 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3 ஆயிரத்து 12 மில்லியன் கன அடியாகவும் (3 டி.எம்.சி.) உள்ளது.ஆண்டு தொடக்கத்தில் 11 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்த இந்த ஏரிகளில், தற்போது 9 ஆயிரத்து 73 மில்லியன் கன அடி (9 டி.எம்.சி.) மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

மே மாதம் திறப்பு
தற்போது இந்த ஆண்டுக்கான முதல் தவணையாக கிருஷ்ணா நதி நீரை வழங்கும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆந்திர மாநில அரசு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வருகிற மே மாதம் முதல் வாரத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் மே மாதம் முதல் அல்லது 2-வது வாரம் தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் தாமரைக்குப்பம் கிராமத்தில் உள்ள ‘ஜீரோ பாயிண்ட்டை’ வந்தடையும். சென்னை மாநகருக்கு மாதம் சராசரியாக 1 டி.எம்.சி. தேவைப்படுவதால் மாதம் 1 டி.எம்.சி. வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க உள்ளனர். தற்போதைய இருப்பு மூலம் அடுத்த 9 மாதத்திற்கு சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். சராசரியாக ஒரு நாளைக்கு 830 கன அடி வீதம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வரஇருக்கிற நாட்களிலும் கோடை வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் குடிநீர் தேவையும் அதிகரிக்கும். அதேபோல் ஏரிகளில் உள்ள நீரும் விரைவில் ஆவியாகி விடும். இருந்தாலும் நடப்பாண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் இல்லாத கோடையாக கொண்டு செல்ல முடியும். தற்போதைய நிலவரப்படி கண்டலேறு அணையில் 48.55 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல்களை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்