விழுப்புரம் அருகே லாரி மோதி மகளுடன் ராணுவ வீரர் பலி குடும்பத்துடன் காரில் சென்றபோது விபத்து

விழுப்புரம் அருகே லாரி மோதிய விபத்தில் மகளுடன் ராணுவ வீரர் பலியானார். குடும்பத்துடன் காரில் சென்றபோது நிகழ்ந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு

Update: 2021-04-11 16:08 GMT
செஞ்சி,

கார்-லாரி மோதல்

விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் தாலுகா ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் சிவபாலகண்ணன் (வயது 32). ராணுவ வீரர். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த சிவபாலகண்ணன் நேற்று முன்தினம் தனது மனைவி நர்மதா(28), மகள் ஜனனிஸ்ரீ (9), மகன் பிரவீன்குமார் (4) ஆகியோருடன் காரில் விழுப்புரத்தில் உள்ள அக்காள் வீட்டுக்கு வந்திருந்தார். அதன்பிறகு நேற்று அதிகாலை 3 மணியளவில் சிவபாலகண்ணன் தனது மனைவி, குழந்தைகளுடன் ஒதியத்தூருக்கு காரில் புறப்பட்டார். 

பலி

விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் மங்களாபுரம் கிராமத்தில் சென்றபோது எதிரே வந்த லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவபாலகண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய மனைவி, குழந்தைகளை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஜனனிஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். 

தாய்-மகனுக்கு சிகிச்சை 

நர்மதா, பிரவீன்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி டிரைவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதற்கிடையில் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்ற கெடார் போலீசார், சிவபாலகண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கெடாா்  போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்