முதியவரை ஏமாற்றி வாக்குப்பதிவு செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

முதியவரை ஏமாற்றி வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரியிடம் வேட்பாளர் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-04-11 19:26 GMT
தா.பழூர்:

வேட்பாளர் புகார்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அப்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்ய ஒரு முதியவர் வந்துள்ளார். அவருக்கு உதவி செய்ய வந்த வாலிபரிடம், முதியவர் உதயசூரியன் சின்னம் எந்த இடத்தில் உள்ளது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் வேறொரு சின்னத்தை காட்டி இதுதான் உதயசூரியன் சின்னம் என்று கூறி, அந்த முதியவரை ஓட்டு போட வைத்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கண்ணன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னாவிடம் புகார் தெரிவித்தார்.
போலீசார் தீவிர விசாரணை
முதியவர்களுடன் உதவிக்காக வருபவர்கள் வாக்களிக்கும் இடத்திற்கு செல்லக்கூடாது என்றும், வாக்குச்சாவடிக்குள் செல்போன்களை கொண்டு செல்லக்கூடாது என்றும் விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஒரு வாலிபர் வாக்களிக்க வந்த முதியவரை ஏமாற்றி தான் விரும்பும் ஒரு சின்னத்திற்கு வாக்களிக்க வைத்தது மற்றும் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது அப்பகுதி மக்களிடம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எந்த வாக்குச்சாவடியில் இந்த சம்பவம் நடைபெற்றது என்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில், அந்த தொகுதிக்கு உட்பட்ட அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும் போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அந்த சம்பவத்தின்போது வாக்குப்பதிவு செய்யும் இடத்தில் இருந்த கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் ஏன் அதை தடுக்கவில்லை என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்