என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

வலங்கைமான் அருகே என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் ெகாள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-04-12 16:13 GMT
வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள வடகரை ஆலத்தூரில் வசித்து வருபவர் பழனிவேல்(வயது 54). இவரது மனைவி மீரா(50). இருவரும் மாடி வீட்டில் வசித்து வருகின்றனர், இவர்களது மகன் மார்கோனி(29) சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்,

மார்கோனிக்கு இன்று(12-ந் தேதி) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்த செலவிற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மார்கோனி தனது தந்தையின் வங்கி கணக்கிற்கு ரூ.60 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார். அதனை வங்கியில் இருந்து எடுத்து வந்து பழனிவேல் வீட்டில் வைத்து இருந்தார்.

50 பவுன் நகைகள்-ரூ.60 ஆயிரம் கொள்ளை

நேற்று முன்தினம் இரவு பழனிவேலுவும், அவரது மனைவி மீராவும் வீட்டுக்குள் உள்ள அறை ஒன்றில் தூங்கிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் பழனிவேலு வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், வீட்டின் பின்புற கதவை உடைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர்.

பின்னர் பழனிவேல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தூங்கிக்கொண்டு இருந்த அறையை வெளிப்புறமாக பூட்டி உள்ளனர். அங்கு இருந்த மற்றொரு அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு சென்று விட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.15 லட்சம் ஆகும்.

வெளிப்புறமாக பூட்டப்பட்ட கதவு

இ்ந்த நிலையில் நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் வழக்கம்போல் காலையில் கண்விழித்து பார்த்த பழனிவேல் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அறையில் இருந்து வெளியில் வருவதற்காக கதவை திறக் க முயன்றனர். அப்போது தாங்கள் தூங்கிக்கொண்டிருந்த அறையின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜன்னல் வழியே சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.

அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பழனிவேல் இருந்த அறையின் கதவை திறந்து விட்டனர். அதன் பின்னர் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டிற்குள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பழனிவேல் தம்பதியினருக்கு தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிவேல் இதுகுறித்து வலங்கைமான் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு நன்னிலம் போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன், வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் வந்து பார்வையிட்டு கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் திருவாரூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் ‘ராக்ஸி’ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள சுடுகாடு வரையில் ஓடி அங்கேயே நின்று விட்டது.

சுடுகாட்டில் கிடந்த காலி நகைப்பெட்டிகள்

அங்கு பழனிவேல் வீட்டில் நகைகள் வைக்கப்பட்டு இருந்த நகைப்பெட்டிகள் மட்டுமே கிடந்தது. பழனிவேல் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள், சுடுகாட்டில் வைத்து நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு காலிப்பெட்டிகளை அங்கு போட்டு விட்டு சென்று உள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

என்ஜினீயர் வீடு புகுந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் வடகரை ஆலத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்