ரோஜா பூங்காவில் மலர்கள் பூக்க தொடங்கின

கோடை சீசனையொட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூக்க தொடங்கி உள்ளன.

Update: 2021-04-13 15:45 GMT
ஊட்டி,

கோடை சீசனையொட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூக்க தொடங்கி உள்ளன.

ரோஜா பூங்கா

மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள், கண்காட்சிகள் இடம் பெறுவது வழக்கம். கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகள் நன்றாக செழித்து வளர்வதற்காக கவாத்து செய்யப்பட்டது.

அங்கு 4,201 ரகங்களை சேர்ந்த 31,500 வீரிய ரக ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. செடிகளுக்கு இயற்கை உரம் இடுவது, களை எடுப்பது, நோய் தாக்காமல் இருக்க மருந்து தெளிப்பது என பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர்.

பூத்துக்குலுங்கும் மலர்கள்

அலங்கார செடிகள் அழகாக வெட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கோடை சீசனை வரவேற்கும் வகையில் தற்போது பூங்காவில் ரோஜா மலர்கள் பூக்க தொடங்கி உள்ளது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்பட பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

இதனை நடைபாதையில் நடந்து சென்றபடி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்து செல்கின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து மலர்களை பார்த்து ரசிக்கிறார்கள்.

கேள்விக்குறி

கடந்த ஆண்டு கொரோனா நோய் பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு நடைபெறும் அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. நடப்பாண்டில் பாதிப்பு இருந்தாலும் இ-பதிவு நடைமுறையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 பூங்காவில் 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும். ஒரு மணி நேரம் மட்டும் பார்க்க அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் உள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கோடை சீசனை ஊட்டி மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் செய்திகள்