கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றாத 4 கடைகளுக்கு சீல்- கலெக்டர் கதிரவன் நடவடிக்கை

ஈரோட்டில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு சீல் வைத்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.

Update: 2021-04-13 23:00 GMT
ஈரோடு
ஈரோட்டில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு சீல் வைத்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.
முக கவசம் கட்டாயம்
கொரோனா பாதிப்பின் 2-வது அலை தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 600-யை தாண்டியது. எனவே கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், தவறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது.
பொது இடங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும், கிருமி நாசினி மருந்துகளை அடிக்கடி         பயன்படுத்    வேண்டும்     உள்ளிட்ட விதிமுறைகள்          விதிக்கப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்க அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சீல் வைப்பு
இந்தநிலையில் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு, வில்லரசம்பட்டி ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அந்த பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சென்ற அவர் நோய் தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது எலக்ட்ரிக்கல் கடை, வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை உள்பட 4 கடைகளில் நோய் தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த 4 கடைகளுக்கு சீல் வைத்தும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.
இதேபோல் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்