வீடுகள், தோட்டங்களில் பாட்டில்களை தொங்க விடும் மக்கள்

நள்ளிரவில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை அறிய வீடுகள், தோட்டங்களில் பாட்டில்களை மக்கள் தொங்க விடுகின்றன.

Update: 2021-04-14 13:48 GMT
கூடலூர்

நள்ளிரவில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை அறிய வீடுகள், தோட்டங்களில் பாட்டில்களை மக்கள் தொங்க விடுகின்றன. 

காட்டுயானைகள் அட்டகாசம்

கூடலூர், பந்தலூர் தாலுகாவில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தேவாலா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகள் வீடுகளை சேதப்படுத்தின. மேலும் விவசாய பயிர்களை நாசப்படுத்தின. 

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இரவில் தங்களது வீடுகளில் பொதுமக்கள் அயர்ந்து தூங்கிய பிறகு ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண பொதுமக்கள் நூதன முறையை கடைபிடிக்க தொடங்கி உள்ளனர். 

காலி பாட்டில்கள்

அதாவது கூடலூர், பந்தலூர் தாலுகாவில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் கயிறு கட்டி பாட்டில்களை தொங்கவிட்டு உள்ளனர். அதை காட்டுயானைகள் கடந்து செல்லும்போது பாட்டில்கள் ஒன்றோடொன்று உரசி சத்தம் எழுப்புகின்றன. இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்து கொள்கின்றனர். 

மேலும் பாட்டில்கள் உரசி எழும் சத்தம் காரணமாக சில நேரங்களில் காட்டுயானைகளும் திரும்பி சென்றுவிடுகின்றன.

ஊருக்குள் வருவதை அறிய...

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, காட்டுயானைகள் தொடர்ந்து வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி கொண்டே இருக்கின்றன. நள்ளிரவில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை அறியும் வகையில் காலி பாட்டில்களை கட்டி தொங்க விட்டுள்ளோம். 

இதன் மூலம் எழும் சத்தத்தை கொண்டு காட்டுயானைகள் நடமாட்டத்தை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்