ஆழியாறு அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதற்கிடையில் தடுப்பணை தடையை மீறி சென்றவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2021-04-14 17:39 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதற்கிடையில் தடுப்பணை தடையை மீறி சென்றவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

ஆழியாறு அணை

தெலுங்கு வருட பிறப்பு, தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே ஆழியாறுக்கு  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

 அணை பூங்கா மற்றும் அணை பகுதியை சுற்றி பார்த்தனர். 
அணையில் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்துக் கொண்டனர். 

மேலும் அத்துமீறி அணைக்குள் இறங்கிய சுற்றுலா பயணிகளை பொதுப்பணித்துறை ஊழியர்கள் எச்சரித்து வெளியே அனுப்பி வைத்தனர்.

தடையை மீறி செல்ல முயற்சி 

வால்பாறை ரோட்டில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஆழியாறு அணைக்கு எதிரே உள்ள தடுப்பணையில் குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

இதை தடுக்க தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் அணைக்கு செல்லும் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கயிறு கட்டப்பட்டது. 

அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சுற்றுலா பயணிகள் சிலர் தடையை மீறி செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

வாக்குவாதம்

ஆனால் அதையும் மீறி செல்ல முயன்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இரு தரப்பினரும் மோதி கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து போலீசார் இருதரப்பினரும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சில சுற்றுலா பயணிகள் வேறு வழியாக தடுப்பணைக்கு சென்று குளித்தனர். 

ஆனால் அவர்களை போலீசார் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போலீசாரின் தடையை மீறி சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.

குரங்கு நீர்வீழ்ச்சி 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் மழை மூலம் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. 

இதனால் நீர்வீழ்ச்சிக்கு வரும் வரும் நீர்வரத்து குறைந்து விட்டது. தற்போது தண்ணீர் குறைவாக விழுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சிலர் மட்டுமே நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து விட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்