மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

திட்டக்குடி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-14 19:10 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே  நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகாசன் மகன் முருகன் (வயது 37) தொழிலாளி. இவருக்கும் இவருடைய அக்காள் செல்வி (40) என்பவருக்கும்  இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக தன்னை செல்வி ஆட்கள் வைத்து சொத்தை எழுதித் தருமாறு மிரட்டல் விடுப்பதாகவும்,  ஊரைவிட்டு தனிமை படுத்துவதாகும்  ஆவினங்குடி போலீசில் முருகன் புகார் அளித்துள்ளார். 
ஆனால்  புகார் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை  எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த முருகன் நேற்று காலை அதே ஊரில் உள்ள 50 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறினார். பின்னர் அவர் தனது கழுத்தில் கயிறை மாட்டிக்கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

நடவடிக்கை

 இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகனிடம் கீழே இறங்கி வருமாறு கூறினர். அதற்கு அவர் தான் அளித்த புகார் மீது உரிய உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால் தான் கீழே இறங்கி வருவேன் என்று கூறினார்.
 இதையடுத்து போலீசார், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து முருகன் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே இறங்கி வந்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்