கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்

Update: 2021-04-14 19:56 GMT
அழகர்கோவில்
தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
கள்ளழகர் கோவில்
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என அழைக்கப்படும் கள்ளழகர் கோவில் உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி இக்கோவிலில் நேற்று அதிகாலையில் இருந்து மாலை வரை பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முக கவசம் அணிந்தபடி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேற்று மூலவர் கள்ளழகர் சுந்தரராசபெருமாள் மற்றும் உற்சவர் சுவாமிகள், தேவியர்கள் வண்ணப் பூக்கள், மனோரஞ்சித மாலைகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைதொடர்ந்து தங்கள் விளைநிலங்களில் விளைந்த தானிய வகைகளை கோவில் தானிய கிடங்கில் காணிக்கையாக செலுத்தினர். பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலில் பக்தர் சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்தனர்.
அழகர்மலையில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலிலும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தேன், தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அங்குள்ள வித்தக விநாயகர், வேல் சன்னதியிலும் சிறப்பு பூஜை நடந்தது.
இங்கும் பக்தர்கள் அரசு வழிகாட்டுதல் முறையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. இங்கு தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி வெளிமாவட்டம், சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ராக்காயி அம்மனை அவர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவிலில் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு சித்திரரத வல்லப பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. ரகுராமன் பட்டர் பூஜைகள் செய்தார். தென்கரை மூலநாதர் சுவாமி கோவிலில் பால், தயிர் உள்பட 12 வகையான அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது. செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன், கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சண்முகவேல் அர்ச்சகர் சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்தார். செயல்அலுவலர் இளமதி, கோவில்பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
திருவேடகம் ஏடகநாதர்சுவாமி கோவிலில் அம்மன், சுவாமிக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. பரம்பரை அறங்காவலர் சேவுகன்செட்டியார், செயல் அலுவலர் இளஞ்செழியன், கோவில்பணியாளர் முத்துவேல் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாடிப்பட்டி 
வாடிப்பட்டி பகுதியில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தாதம்பட்டி நீலமேகப் பெருமாள் கோவில், அய்யப்பன் கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், ராஜகணபதி, நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில், குலசேகரன்கோட்டை வல்லப கணபதி கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், கச்சைகட்டி நீலமேகப் பெருமாள் கோவில், ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் கொட்டாணிபட்டியில் உள்ள வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயர் அருள் பெற்றுச் சென்றனர்.

மேலும் செய்திகள்