வாலிபர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2021-04-15 19:11 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 296 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 25 ஆயிரத்து 660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 179 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களில் தெலுங்கானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், சென்னை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கடலூர் வந்த 4 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 54 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 121 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு நேற்று 2 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

வாலிபர் பலி

கடலூரை சேர்ந்தவர் 35 வயது வாலிபர். கடந்த சில நாட்களாக இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இதுபற்றி அப்பகுதியினர் கடலூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் கடலூர் சுகாதாரத்துறை ஊழியர்களை தொடர்பு கொண்டு, அந்த வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார்.
இதையடுத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்த வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

115 பேர் வீடு திரும்பினர்

இதேபோல் குமராட்சியை சேர்ந்த 70 வயது முதியவர், கொரோனா அறிகுறிகளுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று பலனின்றி இறந்தார்.
மேலும் நேற்று மட்டும் 115 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், இன்னும் 11 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 715 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 369 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்