கொரோனா அச்சம் எதிரொலி: ஆய்வு கூட்டத்திற்கு கையில் வேப்பிலையுடன் வந்த மாநில தகவல் ஆணையர்

கொரோனா அச்சம் எதிரொலியால், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு கையில் வேப்பிலையுடன் மாநில தகவல் ஆணையர் வந்தார். அவருடைய கார் முதல் கூட்ட அரங்கம் வரை வேப்பிலை இடம் பெற்று இருந்தது.

Update: 2021-04-16 17:10 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநில தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் கோவிந்தராவ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் ஆணையர் ராஜகோபால் வந்தார். அப்போது அவருடைய கையில் கொத்தாக வேப்பிலை இருந்தது. அவர் ‘மாஸ்க்’ அணிந்திருந்தபோதும் வாய் மற்றும் மூக்கை வேப்பிலையால் மூடியபடி கூட்ட அரங்கிற்கு வந்தார்.

வேப்பிலை தோரணம்

முன்னதாகவே கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் கூட்ட அரங்கின் நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் வேப்பிலைகளை தோரணமாக கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. ஆலோசனை கூட்டம் 1½ மணி நேரம் நடந்தது. கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது தகவல் ஆணையர் ராஜகோபால், அடிக்கடி வேப்பிலையை தனது மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார்.

மேலும் கூட்டத்தின்போது மேஜை பகுதியிலும் தனக்கு முன்பாக வேப்பிலை கொத்து ஒன்றை வைத்திருந்தார். பின்னர், கூட்டம் முடிந்து தனது காரில் ஏறினார். அப்போது காரின் முன் இருக்கைக்கு எதிரே உள்ள கண்ணாடி பகுதியில் கொத்து, கொத்தாக வேப்பிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

கொரோனா அச்சம் எதிரொலி

தமிழகத்தில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள வேப்பிலையும் ஒரு இயற்கையான கிருமி நாசினி என்பதால், அதை தகவல் ஆணையர் தனது கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார் என கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பேசியபடி சென்றனர். 

மேலும் செய்திகள்