மாமல்லபுர சிற்பக்கலைஞர்களின் கைவண்ணத்தில் 3 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட ராமர் கோவில் மாதிரி மரச்சிற்பம் - லாரி மூலம் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டது

மாமல்லபுரத்தில் 3 அடி உயரத்தில் மரத்தில் அழகுர வடிவமைக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி மரச்சிற்பம் ராம்ஜென்ம பூமியில் அமைந்துள்ள ராமர் கோவிலுக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

Update: 2021-04-18 06:20 GMT
மாமல்லபுரம்,

உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் 161 அடி உயரத்தில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இக்கோவிலில் வைப்பதற்காக தேக்கு மரத்திலான மாதிரி சிற்பம் வடிவமைக்க மாமல்லபுரம் பெருமாளேரியில் உள்ள மானசா மரச்சிற்பக்கலை கூடத்தில் ஸ்ரீராமஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர் பரிந்துரைத்து ஆர்டர் வழங்கினர்.

இதையடுத்து தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற மரச்சிற்பக்கலைஞர் கே.ரமேஷ் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட மரச்சிற்பக்கலைஞர்கள் கடந்த 6 மாதமாக இரவு, பகலாக தேக்கு மரத்தில் 3 அடி உயரத்தில் 340 தூண்களுடன் தேக்கு மரத்தில் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி மரச்சிற்பத்தை தயார் செய்தனர்.

ராமர், சீதா கருவறையுடன் அழகுர வடிவமைத்த சிற்பத்தின் தற்போது 100 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், ராமர் கோவில் மரச்சிற்பம் லாரி மூலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அயோத்திக்கு சென்றடையும் இந்த மரசிற்பத்திற்கு வருகிற ஏப்ரல் 21-ந்தேதி (புதன்) ராமருக்கு உகந்த விஷேச தினமான ராமநவமி அன்று ராம பக்தர்கள் முன்னிலையில் சாதுக்கள் வைணவ பட்டர்கள் மூலம் சிறப்பு பூஜை, வழிபாடு செய்யப்பட்டு ராமர் கோவில் வளாகத்தில் இந்த ராமர் கோவில் மரச்சிற்பம் வைக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்