திருமணம், பொது நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க வேண்டும்

திருமணம், பொது நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க வேண்டும்

Update: 2021-04-19 16:20 GMT
ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு
கோவை

கலெக்டரிடம் மனு

தமிழகம் முழுவதும் உள்ள ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவறை அலங்காரம் அமைப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் தமிழக ஹயர் கூட்ஸ் உரிமையாளர்கள் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்கள். 

அவர்கள் நேற்று காலை ரெயில் நிலையம் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவை கலெக்டர் அலுவலகம் வ ந்தனர்.

 பின்னர் அவர்கள் கலெக்டர் நாகராஜனிடம் மனு அளித்தனர். முன்னதாக சங்கத் தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுந்தர்ராஜன், ஒருங்கிணைப்பாளர் ராஜன், மாநில பொருளாளர் பால்ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-


வாழ்வாதாரத்தை பாதிக்கிறது


தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் வேலைவாய்ப்பு கிடைத்தது. 

தேர்தலின்போது அனைத்து கட்சியினருக்கும் ஒலி, ஒளி போன்ற அனைத்து உதவிகளையும் செய்து தந்தோம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் அறிவிப்பு எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் 100 பேர் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுவது எங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது.

 2 ஆயிரம் பேர் உட்காரக்கூடிய திருமண மண்டபத்தில் 100 பேர் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால் பலர் திருமணங்களை கல்யாண மண்டபங்களில் நடத்துவதை ரத்து செய்து விட்டு கோவில்களில் நடத்தி விடுகிறார்கள்.


50 சதவீதம் அனுமதிக்க வேண்டும்

தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள். வணிகவளாகங்களில் 50 சதவீதத் தினருடன் இயங்கலாம் என்று அறிவித்ததை போல திருமணம் உள்பட பொது நிகழ்ச்சிகளையும், கோவில், தேவாலயம், மசூதி போன்ற அனைத்து மதம் சார்ந்த சமூக நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிறுவனம் சார்ந்த கூட்டங்கள் நடத்த 50 சதவீதம் பேருக்கு  சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். 


அப்போது தான் எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்