திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-19 16:27 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வதிஷ்டபுரத்தில்  சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதே பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
 இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து பல முறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். 
பின்னர் அவர்கள் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க கோரியும் பேரூராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் குடிநீர் பிரச்சினை குறித்து பேசினர்.

நடவடிக்கை

 ஆனால் அதிகாரிகள் உரிய பதிலை கூறவில்லை என தெரிகிறது. இதனால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.  அதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்