திருவள்ளூர் அருகே கொரோனா தடுப்பூசி போடும் பணி கவர்னர் பார்வையிட்டார்

திருவள்ளூர் அருகே கொரோனா தடுப்பூசி போடும் பணியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார்.

Update: 2021-04-21 01:25 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் பார்வையிட்டு தடுப்பூசி போட்டு கொண்டவர்களுடன் கலந்துரையாடினார்.

18 வயது நிரம்பிய அனைவருக்கும்

அப்போது அவர் கூறியதாவது:-

நீங்கள் தடுப்பூசி போட்டு கொண்டது பாராட்டுக்குரியதாகும். நானும் தடுப்பூசி போட்டு கொண்டேன். எனவே நீங்களும், உங்களது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் தடுப்பூசி போட்டு கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. பத்திரிகையாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வருகிற 1-ந்தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இது குறித்த விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்