கொரோனா பரவல் எதிரொலி: பெரிய மார்க்கெட் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு

கொரோனா பரவல் எதிரோலியாக பெரிய மார்க்கெட் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2021-04-24 06:40 GMT
புதுச்சேரி, 

புதுவையில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் பெரிய மார்க்கெட், மீன்மார்க்கெட் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. எனவே அதன் மூலம் கொரோனா பரவும் அச்சம் உருவானது.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், பெரிய மார்க்கெட்டில் இயங்கி வரும் காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து உள்ளாட்சி துறை செயலாளர் வல்லவன், நகராட்சி ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பெரிய மார்க்கெட் வியாபாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினர். அப்போது பெரியமார்க்கெட்டில் இயங்கும் காய்கறி கடைகளை ரோடியர் மில் திடல், உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம், புதிய துறைமுக வளாகம், பழைய துறைமுக வளாகத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்பு இருந்தது போல் புதிய பஸ்நிலையம் அல்லது தட்டாஞ்சாவடி பகுதிக்கு ஒதுக்கும்பட வியாபாரிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு முடிவு தெரிவிப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பழைய இடத்தை ஒதுக்கி கொடுத்தால் மட்டுமே வியாபாரம் செய்வது என்றும், இல்லாவிட்டால் ஒட்டுமொத்த காய்கறி வியாபாரிகளும் கடைகளை மூடுவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் கூட்டத்தில் எடுத்த முடிவை அதிகாரிகளிடம் தெரிவிக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்