கோவையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

கோவையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

Update: 2021-04-28 17:13 GMT
கோவை

கோவையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். .

கொரோனா பரவல்

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பலர் கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பல இடங்களில் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் மாவட்டத்திற்கு போதிய அளவில் தடுப்பூசிகள் வரவில்லை. முதல் கட்ட தடுப்பூசி போட்டவர்கள் மீண்டும் 2-வது கட்ட தடுப்பூசி போட சுகாதார மையங்களை அணுகி வருகிறார்கள். மேலும் புதிதாகவும் தடுப்பூசி போடுவதற்காகவும் வருகிறார்கள்.

பணிகள் நிறுத்தம்

இதற்கிடையே  கோவை புரூக்பாண்டு சாலையில் உள்ள மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி போட ஏராளமானோர் வந்தனர். ஆனால் அங்கு பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

இதுபோன்று மாநகர பகுதியில் பல இடங்களில் தடுப்பூசி போட சென்றவர்கள் திரும்பி சென்றனர். இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பில் இல்லை. நிலைமை சமாளிக்கப் படுகிறது என்றனர்.

 மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அரசு ஆஸ்பத்திரி 

கோவை மாவட்டத்தில் வெறும் 400 தடுப்பூசி மட்டும் இருந்தன. எனவே தேவையான அளவுக்கு தடுப்பூசிகள் கேட்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 58 ஆயிரத்து 720 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் தினமும் தலா 400 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. மருந்துகள் வந்த பிறகு மீண்டும் மற்ற பகுதிகளிலும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்