மங்களூருவில் தொழில் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் 7 பேர் கைது

மங்களூருவில் தொழில் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-30 20:08 GMT
மங்களூரு: மங்களூருவில் தொழில் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

கொல்ல முயற்சி 

மங்களூரு டவுன் பழநீர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ்(வயது 58). தொழில் அதிபரான இவர் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு(2020) நவம்பர் மாதம் 15-ந் தேதி கைகம்பா பகுதியில் அப்துல் அஜீஸ் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது காைர வழிமறித்த மர்மகும்பல், அப்துல் அஜீசை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. 

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று அப்துல் அஜீஸ் வீடு திரும்பி இருந்தார். மேலும் மர்மநபர்கள் தன்னை கொல்ல முயன்றதாக பஜ்பே போலீஸ் நிலையத்தில் முகமது அஜீஸ் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

7 பேர் கைது 

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து இருந்தனர். இந்த நிலையில் அப்துல் அஜீசை கொல்ல முயன்றதாக முகமது ஆதீப் ஹீசாம்(வயது 19), பிலால் முகைதீன்(49), நசீர் அகமது(46), இப்ராகிம் ஷாகீர்(19), முகமது நிகால்(18), அப்பாஸ் சப்வான்(23), அப்துல் ஜாபர்(46) ஆகிய 7 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் அப்துல் அஜீசை கொல்ல முயன்றது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 7 பேர் மீதும் பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்