தபால் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகைகள் திருட்டு

ஜெயங்கொண்டத்தில் தபால் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-04-30 20:32 GMT
ஜெயங்கொண்டம்:

நகைகள் திருட்டு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 40). பெயிண்டர். இவரது மனைவி கலாராணி(35). இவர் நேற்று ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி ஒன்றில் பணம் எடுத்துக்கொண்டு, பின்னர் தனியார் நகைக்கடை ஒன்றில் அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்பதற்காக சென்றார்.
அங்கு அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டு தனது மணிபர்சில் வைத்துக்கொண்டு, ஜெயங்கொண்டம் தபால் நிலையத்திற்கு அவர் சென்றார். அங்கு மணிபர்சை மேஜை மீது வைத்துவிட்டு, அதன் அருகிலேயே பணம் கட்டுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, படிவத்தை கொடுத்துவிட்டு மேஜையை பார்த்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது மணிபர்சை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவரது மணிபர்சில் 2 பவுன் நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
மயங்கி விழுந்தார்
இதனால் அதிர்ச்சி அடைந்த கலாராணி, அழுது கொண்டே ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு தபால் அலுவலகம் முன்பு கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் மற்றும் போக்குவரத்து போலீசார் அவரை மீட்டு முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்து, சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு, நகைகளை திருடிச்சென்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஜெயங்கொண்டத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்