வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பால் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க பொதுமக்கள் செல்ல வேண்டாம்

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பால் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-01 17:22 GMT
வால்பாறை

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பால் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வனவிலங்குகள் நடமாட்டம்

வால்பாறை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டன. இதையடுத்து வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இதனால் தேயிலை தோட்டங்கள், வனப்பகுதியையொட்டி ஈரப்பதம் உள்ள இடங்களில் புதிதாக புற்கள் முளைத்துள்ளன.

 புற்களை மேய்வதற்காக அதிகளவில் காட்டெருமைகள், கடமான்கள், வரையாடுகள் வரத்தொடங்கியுள்ளன. மேலும் இவற்றை வேட்டையாட சிறுத்தைகளும் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. 

சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தேயிலை தோட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. 

பொதுமக்கள் விறகு சேகரிப்பு

இதற்கிடையில், வால்பாறை நகரில் வனப்பகுதியொட்டிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வனச்சோலை குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆபத்தை உணராமல் வனப்பகுதிகள் விறகு சேகரிக்க சென்று வருகின்றனர்.

 இதில் பெரும்பாலும் வயதானவர்கள் தான் அதிகமாக  விறகு சேகரிக்க சென்று வருகின்றனர். விறகு சேகரிக்க செல்பவர்களை தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மனித-வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

மேலும் தற்போது தேயிலை தோட்டங்கள், குடியிருப்பையொட்டிய வனப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறையினர் எச்சரிக்கை

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேயிலை தோட்டங்களையொட்டி உள்ள பகுதிகளில் அதிகளவில் காட்டெருமைகள், கடமான் ஆகியவற்றின் நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டமும் உள்ளது. இதையடுத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வாழைத்தோட்டம், சோலையாறு எஸ்டேட் ஆகிய இடங்களில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டுகள் வைத்துள்ளோம்.

இந்த நிலையில் எஸ்டேட் பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களும் வால்பாறை நகர் பகுதியையொட்டிய பொதுமக்களும் ஆபத்தை உணராமல் விறகுகள் சேகரிக்க வனப்பகுதிக்குள் சென்று வருகின்றனர். தேயிலை தோட்ட பகுதியில் காட்டெருமைகள், சிறுத்தைகள் பதுங்கியிருக்கும் அபாயம் உள்ளது. 

இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் விறகு சேகரிக்க வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்