காணியாளம்பட்டி பகுதியில் பேக்கரி கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்பு

காணியாளம்பட்டி பகுதியில் பேக்கரி கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-01 18:31 GMT
வெள்ளியணை
பேக்கரி கடைகள்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து பல்வேறு மாநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, அனைவரும் கட்டாயம் முக கவசம் அணியவும், அப்படி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தல், பஸ்களில் நின்றுகொண்டு பயணம் செய்யாமல் இருத்தல், திருவிழாக்கள் நடத்த தடை, திருமணம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள், உணவகங்கள், பேக்கரி கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
இவற்றை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கடவூர் ஒன்றியம் காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில், கரூர்-மணப்பாறை சாலையில் உள்ள பேக்கரி கடைகள் எவ்வித கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் இயங்கி வருகின்றன. 
சமூக இடைவெளி
இங்கே காலை, மாலை வேளைகளில் கரூரில் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் பஸ், வேன் போன்ற வாகனங்கள் தொழிலாளர்கள் டீ, வடை போன்றவற்றை சாப்பிடவும் தின்பண்டங்களை வாங்கவும் நிறுத்துகின்றன. அந்த தொழிலாளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் கும்பல் கும்பலாக சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். 
கொரோனா பரவும் அபாயம்
மேலும் அதே நேரத்தில் சுற்று பகுதியை சேர்ந்த கிராம மக்களும் அதிக அளவில் பேக்கரிக்கு வருகின்றனர். இப்படி பலரும் ஒரே இடத்தில் கூடும் சூழ்நிலையில் அதில் யாரேனும் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருந்தால், அதன் மூலம் பலருக்கும், பல பகுதிகளுக்கும் கொரோனா பரவக்கூடிய அபாயம் உள்ளது. 
எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் அதிகப்படியான கும்பல் கூடுவதை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்