காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

கோத்தகிரி அருகே காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2021-05-01 23:44 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார்.

முதியவர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அச்சனக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 67). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சந்திரசேகர் தனது வீட்டில் இருந்து மாமரம் பகுதிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே ஒரு காட்டுயானை வந்தது. 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓட முயன்றார். எனினும் துரத்தி வந்த காட்டுயானை அவரை துதிக்கையால் தாக்கி தூக்கி வீசிவிட்டு சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊருக்குள் புகுந்த கூட்டம்

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூர் அருகே தட்டாம்பாறை, செம்பக்கொல்லி, கோட்டப்பாடி ஆகிய பகுதிகளுக்குள் 10 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் புகுந்தது. 

தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேரம்பாடி வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து பாதிப்பு

அப்போது நேற்று காலை 6 மணிக்கு அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலையில் காட்டுயானைகள் உலா வந்தன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை சாமியார் மலைப்பகுதிக்கு விரட்டினர். அதன்பின்னரே அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

மேலும் செய்திகள்