தேனி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் நடந்த வாக்கு எண்ணிக்கை

தேனி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டது.

Update: 2021-05-02 13:57 GMT
தேனி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடந்தது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 74 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவை சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக அறைகளில் வைத்து பூட்டப்பட்டு அந்த அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் 1,400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
‘சீல்’ அகற்றம்
தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகளில் ‘சீல்’  அகற்றப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்து வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்தது.
வாக்கு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டு இருந்தன. அங்கு சமூக இடைவெளியுடன் அலுவலர்கள் அமர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரத்திலும் பதிவான வாக்குகள் விவரம் வேட்பாளர்களின் முகவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அந்த விவரங்களை முகவர்கள் குறித்துக் கொண்டனர்.
14 மேஜைகளிலும் எண்ணப்பட்ட வாக்குகள் விவரம், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு அமைக்கப்பட்ட மேஜைக்கு வழங்கப்பட்டது. அங்கு அவற்றை சரிபார்த்து, 14 மேஜைகளில் எண்ணப்பட்ட வாக்கு விவரங்களை மொத்தமாக கூட்டி ஒவ்வொரு சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலில் 100 மீட்டர் தொலைவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து 50 மீட்டர் தூரம் வரை சமூக இடைவெளியுடன் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் பணிக்கு வந்த அலுவலர்கள் ஆகியோர் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை போலீசார் சரிபார்த்தனர். அவை சரியாக இருந்த நபர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்