சீட்டு விளையாடிய தகராறில் வாலிபர் கொலை: கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் தேனியில் போக்குவரத்து பாதிப்பு

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் சீட்டு விளையாடிய தகராறில் வாலிபரை கொைல செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-05-03 14:06 GMT

தேனி:
தேனி அல்லிநகரம் நக்கீரர் தெருவை சேர்ந்தவர் ராம்பிரசாத் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் ராம்பிரசாத் அதே பகுதியை சேர்ந்த சிலருடன் சீட்டு விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 16 வயது சிறுவன் உள்பட 4 பேர் சேர்ந்து ராம்பிரசாத்தை தாக்கி அவரை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சாலை மறியல்
இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் தினேஷ் (20), பால்ராஜ் மகன் சூர்யா என்ற மனீஸ் (20), வீராச்சாமி மகன் மதன் (20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ராம்பிரசாத்தின் உறவினர்கள் பலர் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் பெரியகுளம் சாலையில் நேற்று மறியல் செய்தனர். அப்போது கொலையாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலையாளிகள் மீது தொய்வு இன்றி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 
இதனிடையே அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலையில் வாகனங்கள் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை அணிவகுத்து நின்றன. இந்த நெரிசலில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சென்ற காரும் சிக்கிக் கொண்டது. மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்ட பின்பு கலெக்டரின் வாகனம் அந்த இடத்தை கடந்து சென்றது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்