சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னூர், கோத்தகிரியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-05-03 18:27 GMT
குன்னூர்,

குன்னூர், கோத்தகிரியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வறட்சியின் பிடியில் சிக்கி இருந்த வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி வருகின்றன. மேலும் வனவிலங்குகளுக்கு தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.

இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. லேசாக தொடங்கிய மழையானது சிறிது நேரத்தில் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை காலை 8 மணி வரை பெய்தது.

மரம் விழுந்தது

இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார் அருகே மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பின்னரே அந்த வழியாக போக்குவரத்து சீரானது.

இதேபோன்று கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. ஊட்டியில் நள்ளிரவில் லேசான மழை பெய்தது. நகரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.

மழை  அளவு

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-2.2, கெத்தை-12, கிண்ணக்கொரை-8, குன்னூர்-85, பர்லியார்-58, உலிக்கல்-75, எடப்பள்ளி-75, கோத்தகிரி-50, கோடநாடு-15, கீழ் கோத்தகிரி-69 உள்பட மொத்தம் 534.2 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 18.42 மில்லி மீட்டர் ஆகும். அதிகபட்சமாக குன்னூரில் 8 சென்டி மீட்டர் மழை பெய்தது. கோடை மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்