கொரோனா தொற்றுக்கு 4 பெண்கள் இறந்தனர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 4 பெண்கள் இறந்தனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர்

Update: 2021-05-03 19:22 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 4 பெண்கள் இறந்தனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
4 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி தொடர்ந்து பலியாகி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 197 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 8 ஆயிரத்து 996 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 7 ஆயிரத்து 623 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 227 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இரவு வரை ராமநாதபுரம், ராமேசுவரம், முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் 8 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். ராமநாதபுரத்தில் கடந்த 2 நாட்களில் 12 பேர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 734 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 155 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் செய்திகள்