ரசிக்க ஆளின்றி வெறிச்சோடிய பூங்காக்கள்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், ரசிக்க ஆளின்றி பூங்காக்கள் வெறிச்சோடின.

Update: 2021-05-03 23:13 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், ரசிக்க ஆளின்றி பூங்காக்கள் வெறிச்சோடின. 

சுற்றுலா பயணிகள் வர தடை

கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் இருந்தாலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க அனுமதிக்கப்பட்டது. 

இதற்கிடையில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியதால், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.

புதிய கட்டுப்பாடுகள்

இதனால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை. வழக்கம்போல் கோடை சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கினாலும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக சீசன் தொடரவில்லை. வழக்கமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மே 1-ந் தேதி கோடை விழா தொடங்கி நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு புதிய கட்டுப்பாடுகளால் கோடை விழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இல்லை. மேலும் வார விடுமுறை நாட்களில் நடைபெறும் கண்காட்சிகள் நடத்த வாய்ப்பு இல்லை.

ரசிக்க ஆளில்லை

கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. 25 ஆயிரம் பூந்தொட்டிகளில் செடிகள் பராமரிக்கப்பட்டு வந்தது. ரோஜா பூங்காவில் ரோஜா செடிகள் நன்றாக வளர்வதற்காக கவாத்து செய்யப்பட்டது. 

சீசனையொட்டி தற்போது ரோஜா செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. தாவரவியல் பூங்காவிலும் மலர்கள் பூக்க தொடங்கி உள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வராததால் கண்டு ரசிக்க ஆள் இல்லாமல் வாடியும், வெறிச்சோடியும் காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டும் முழு ஊரடங்கால் கோடை விழா ரத்தானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்