கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஆட்டோ டிரைவர் சவாரிக்கு சென்றதால் ரூ.500 அபராதம்

கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஆட்டோ டிரைவர், சவாரிக்கு சென்றதால் அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் 500 ரூபாய் அபராதம் விதித்ததுடன், அவரை தனிமை வார்டுக்கும் அனுப்பி வைத்தனர்.

Update: 2021-05-04 00:19 GMT
திருவொற்றியூர், 

சென்னை மணலி கன்னியம்மன்பேட்டையில் சுமார் 44 வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவருக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அறிகுறி ஏதும் இல்லாததால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

ஆனால் அவர், வீட்டில் இருக்காமல் ஆட்டோ ஓட்ட செல்வதாக சென்னை மாநகராட்சி மணலி மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மணலி போலீசார் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆனந்த் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டில் இல்லை. உறவினர்களிடம் கேட்டபோது அவர், ஆட்டோவை எடுத்துக்கொண்டு சவாரிக்கு சென்றதாக கூறினர்.

ரூ.500 அபராதம்

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சுகாதார துறை அதிகாரிகள், அங்கேயே 2 மணி நேரமாக காத்திருந்தனர். பின்னர் சவாரிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தனிமைப்படுத்தப்பட்ட ஆட்டோ டிரைவரை கண்டித்ததுடன், அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு வேனில் அழைத்து செல்லப்பட்டார்.

“வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நபர்கள் விதிகளை மீறி நோய் பரவும் விதத்தில் வெளியே சுற்றித்திரிந்தால் அவர்களுக்கு நிச்சயம் அபராதம் விதிக்கப்படுவதுடன், தனிமை வார்டுக்கும் அனுப்பி வைக்கப்படுவர்” என சுகாதார துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்