2 பெண்களின் உயிரை பறித்த கொரோனா ஒரே நாளில் 187 பேருக்கு தொற்று

தேனி மாவட்டத்தில் 2 பெண்களின் உயிரை கொரோனா பறித்தது. ஒரேநாளில் 187 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

Update: 2021-05-04 14:48 GMT

தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்படும் நபர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் பெரிய அளவில் அறிகுறிகள் இல்லாத பட்சத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி, பலர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர் காய்ச்சல், மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படும் நபர்கள் உடனடியாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த பெரியகுளத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, வத்தலக்குண்டுவை சேர்ந்த 52 வயது பெண் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 187 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 385 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 213 பேர் நேற்று குணமாகினர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 19 ஆயிரத்து 176 பேர் மீண்டனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு 219 பேர் பலியாகி உள்ளனர்.


மேலும் செய்திகள்