நாகை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 29 பேர் டெபாசிட் இழந்தனர்

நாகை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 29 பேர் டெபாசிட் இழந்தனர்.

Update: 2021-05-04 15:37 GMT
நாகப்பட்டினம்:-

 நாகை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 29 பேர் டெபாசிட் இழந்தனர்.

சட்டசபை தேர்தல்

நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற்றது. 
நாகை தொகுதியில் 13 வேட்பாளர்களும், வேதாரண்யம் தொகுதியில் 12 வேட்பாளர்களும், கீழ்வேளூர் தொகுதியில் 10 வேட்பாளர்களும் என 3 சட்டசபை தொகுதிகளில் 35 பேர் போட்டியிட்டனர். இந்த 3 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் கடந்த 2-ந் தேதி எண்ணப்பட்டன.

நாகை தொகுதி

நாகை தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ஷாநவாஸ் 66,281 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தங்க.கதிரவனை விட 7,238 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இவர்களுடன் தேர்தல் களம் கண்ட நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், சிவசேனா, நாடாளும் மக்கள் கட்சி மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 11 பேர் டெபாசிட் இழந்தனர். 8 பேர் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை பெற்றனர். 

வேதாரண்யம் தொகுதி

வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் 78,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினத்தை விட 12,329 வாக்குகள் கூடுதலாக பெற்றார். 
இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, மக்கள் நீதி மய்யம், சிவசேனா கட்சி மற்றும் 5 சுயேச்சைகள் உள்பட 10 பேர் டெபாசிட்டை இழந்தனர். 8 பேர் நோட்டாவுக்கு குறைவாக வாக்குகள் பெற்றனர்.

கீழ்வேளூர் தொகுதி

கீழ்வேளூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் நாகை மாலி 67,988 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை விட 16,985 வாக்குகள் கூடுதலாக பெற்றார். 
நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, புதிய தமிழகம் கட்சி மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 8 பேர் டெபாசிட் இழந்தனர். 5 பேர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றனர்.

மேலும் செய்திகள்