கடலூரில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி

கடலூரில் அக்னி வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2021-05-04 16:14 GMT
கடலூர், 

கோடைக்காலம் என்றால் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் கோடை கால வெயிலானது வழக்கத்தை விட அதிகமாக பதிவாகும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

அதற்கு ஏற்றார்போல் கடலூரில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. அதாவது 101 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வெளியில் நடுமாடுவதை தவிர்த்து, வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

அக்னி நட்சத்திரம்

இந்த நிலையில் 4-ந் தேதி (அதாவது நேற்று) முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என்றும், வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. வழக்கம்போல் நேற்று காலையில் சூரியன் உதயமாகி ஒளி உடலில் பட்டதும் சுள்ளென சுடுவதை உணர முடிந்தது.

பின்னர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வெயிலின் கொடுமையை தாக்கு பிடிக்க முடியாமல் பாதசாரிகள் கையில் குடைபிடித்து கொண்டும், தலையில் துணியால் போர்த்திக்கொண்டும் சென்றதை பார்க்க முடிந்தது. இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள், தங்களது முகத்தை துணியால் மூடிக்கொண்டு சென்றதை காணமுடிந்தது.

பொதுமக்கள் அவதி

கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் சாலையோர சிறு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் ராட்சத குடையை நட்டி வைத்தும், சிலர் தலையில் துணியால் போர்த்திக்கொண்டும் வியாபாரம் செய்தனர். மதிய வேளையில் அனல் காற்று வீசியதால் வாகனங்களில் சென்ற பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை  வடிந்து உடுத்தி இருந்த ஆடைகளை நனைய செய்ததோடு தாகத்தை வருத்தியது.

இதனால் நீர்-மோர், பழச்சாறு, சாத்துக்குடி ஜூஸ், கரும்பு சாறு, பதனீர், இளநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகியும், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, நுங்கு மற்றும் பழங்களை வாங்கி சாப்பிட்டும் தாகத்தை தணித்துக்கொண்டனர். கடலூரில் நேற்று 99.14 டிகிரி வெயில் பதிவானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்