மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த 4 பேர் கைது

வத்தலக்குண்டுவில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-04 17:27 GMT
வத்தலக்குண்டு: 

வத்தலக்குண்டு மேலக்கோவில்பட்டி சாலையில் உள்ள ஒரு  வீட்டில் வசிப்பவர் சரஸ்வதி (வயது 60). 

நேற்று முன்தினம் இவர், தனது வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 2 பேர், சரஸ்வதியிடம் தண்ணீர் கேட்டனர். 

தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தபோது, கண் இமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி அலறினார். 

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை விரட்டினர். 

இதில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென கீழே விழுந்து விட்டார்.

 அவரை பிடித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


விசாரணையில் பிடிபட்ட வாலிபர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பிரபு (வயது 24) என்று தெரியவந்தது. 

மேலும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியவர் விருதுநகர் மாவட்டம் சேடப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (25) என்று அவர் தெரிவித்தார். 

மேலும் இந்த சம்பவத்தில் மேலக்கோவில்பட்டியை சேர்ந்த காட்டுராஜா (34), முத்துலாபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் (34) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து பிரபு உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 அவர்களிடம் இருந்து தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்