நல்லம்பள்ளி அருகே மர்மவிலங்கு கடித்து 10 ஆடுகள் செத்தன போலீசார் விசாரணை

நல்லம்பள்ளி அருகே மர்மவிலங்கு கடித்து 10 ஆடுகள் செத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-05-04 18:01 GMT
தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கெட்டுஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ். விவசாயியான இவர் வீட்டின் அருகே ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த கருப்புசெட்டி என்பவரும் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் ஆடுகளை வளர்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேரும் தங்கள் ஆடுகளை அருகே உள்ள மேய்ச்சல் நில பகுதியில் ஓட்டிசென்று மேய்த்தனர். பின்னர் ஆடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைத்தனர். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதற்காக ஆட்டுப்பட்டிக்கு 2 பேரும் சென்றனர்.
10 ஆடுகள் பலி
அப்போது சுந்தரராஜ் ஆட்டுப்பட்டியில் 7 ஆடுகளும், கருப்பு செட்டியின் ஆட்டுப்பட்டியில் 3 ஆடுகளும் என மொத்தம் 10 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தன. மேலும் 10 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் இதுபற்றி வனத்துறையினர் மற்றும் தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியாகி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக தொப்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்