லாரி மோதி முதியவர் பலி; கிராம மக்கள் சாலை மறியல்

செந்துறை அருகே சிமெண்டு லாரி மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-04 20:02 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 70). இவர் நேற்று காலை அப்பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து சென்றார். அப்போது செந்துறையில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சிமெண்டு ஏற்றிச்சென்ற லாரி, அவர் மீது மோதியது. இதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றது. இதனை கண்ட கிராம மக்கள் விரட்டிச்சென்று அந்த லாரியை மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து, இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, சாலையில் மரக்கட்டைகளை போட்டு கோவிந்தசாமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டிரைவர் கைது

இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். மறியலால் செந்துறை- ஜெயங்கொண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே செந்துறை போலீசார், விபத்தில் உயிரிழந்த கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் தனசேகரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்