பயறனீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

சித்திரை திருவோணத்தையொட்டி உடையார்பாளையம் பயறனீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா விதிமுறைகளால் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Update: 2021-05-04 20:19 GMT
உடையார்பாளையம்:

16 வகையான அபிஷேகம்
கோவில்களில் நடராஜ பெருமானுக்கு ஆண்டுதோறும் 6 முறை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில் சித்திரையில் திருவோணம், மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய நட்சத்திரங்களிலும், மாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் சதுர்த்தசியிலும் என ஆண்டுக்கு 6 நாட்களில் நடராஜருக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன்படி சித்திரை திருவோணத்தையொட்டி நேற்று அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள நறுமலர் பூங்குழல் நாயகி சமேத பயறனீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பழரசம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கு கோவில் சமஸ்தானம் ராஜ்குமார் பழனியப்பன் முன்னிலை வகித்தார். ஓதுவார்கள் பெரியசாமி, நடராஜன் ஆகியோர் தேவாரம், திருவாசகம், பஞ்சபுராண பதிகங்களை பாடினர்.
வெளியே நின்று வழிபாடு
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான விதிமுறைகள் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்