சென்னை சி.பி.சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்தவர்: கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்த சென்னை சி.பி.சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கொரோனா தொற்றுக்கு பலியானார்.

Update: 2021-05-05 03:33 GMT
ஆவடி, 

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னக்கண்ணு (வயது 55). இவர் சென்னை சி.பி.சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

மேலும் கடந்த 6 ஆண்டாக நீதிபதி ஒருவருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28-ந்தேதி அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சோனூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த சப்-இன்ஸ்பெக்டர் சின்னகண்ணுக்கு மணிமொழி என்ற மனைவியும் ஹேமாவாணி என்ற மகளும், லோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். ஹேமாவாணி சென்னை ஆயுதப்படையில் போலீசிலும், லோகேஸ்வரன் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியனில் போலீசாகவும் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலையில் இதுவரை 8 போலீசார் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்