கொடுமுடி, ஆப்பக்கூடல், அந்தியூர் பகுதியில் 6 வயது சிறுமி- வங்கி மேலாளர் உள்பட 33 பேருக்கு கொரோனா

கொடுமுடி, ஆப்பக்கூடல், அந்தியூர் பகுதியில் 6 வயது சிறுமி-வங்கி மேலாளர் உள்பட 33 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-05 21:32 GMT
கொடுமுடி
கொடுமுடி, ஆப்பக்கூடல், அந்தியூர் பகுதியில் 6 வயது சிறுமி-வங்கி மேலாளர் உள்பட 33 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
நோய் தொற்று
கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறையை சேர்ந்த 6 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கும், சாலைப்புதூரைச் சேர்ந்த 34 வயது ஆணுக்கும், 47 வயது ஆணுக்கும், 75 வயது மூதாட்டிக்கும், 47 வயது ஆணுக்கும் தொற்று பாதித்துள்ளது. வருந்தியாபாளையத்தை சேர்ந்த 55 வயது பெண்ணுக்கும், 41 வயது ஆணுக்கும், அதேபோல் வடக்கு புதுப்பாளையத்தைச் சேர்ந்த 41 வயது ஆணுக்கும், 26 வயது ஆணுக்கும், கொடுமுடி ஏமகண்டனூரைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கும், காங்கேயம் ரோட்டைச்சேர்ந்த 57 வயது ஆண் ஒருவருக்கும், கொட்டம்பட்டி பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த 28 வயது ஆண் ஒருவருக்கும், 49 வயது ஆண் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
பொதுமக்கள் அச்சம்
மேலும் இச்சிபாளையத்தைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கும், கம்மங்காட்டுகளத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கும், கொல்லம்புது பாளையத்தைச் சேர்ந்த 46 வயது ஆண் ஒருவருக்கும், 44 வயது ஆண் ஒருவருக்கும், 59 வயது முதியவர் ஒருவருக்கும் தொற்று பாதித்துள்ளது. இவர்கள் அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. 
வங்கி மேலாளருக்கு கொரோனா...
இதேபோல் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் இயங்கிவரும் அரசு வங்கி கிளை மேலாளருக்கும், அவருடைய மனைவிக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வங்கி உடனடியாக மூடப்பட்டு, 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மூலம் வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பக்கூடலில் 9 பேருக்கு...
அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல் பகுதியில், ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் அப்பகுதி மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 43 வயதுடைய பெண், 60 வயதுடைய பெண், 33 வயதுடைய பெண், 40 வயதுடைய ஆண், 30 வயதுடைய ஆண், 61 வயதுடைய ஆண், 55 வயதுடைய ஆண், 34 வயதுடைய ஆண், 60 வயதுடைய பெண் ஆகிய 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 9 பேரும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மேலும் ஆப்பக்கூடல் பகுதியில் ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அதிகாரி லோகநாதன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தார்கள்.
அந்தியூரில் 3 பேர் 
அதேபோல் அந்தியூர் அருகே உள்ள மூங்கில் பாளையத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர்,  மைக்கேல் பாளையம் பாறையூர் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர், நகலூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
 இவர்கள் 3 பேரும் அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். 
இதைத்தொடர்ந்து அந்தியூர் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரிராமமூர்த்தி தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்