கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1,063 படுக்கைகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1,063 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Update: 2021-05-08 19:53 GMT
பெரம்பலூர்:

ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அணில் மேஷ்ராம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் என 23 இடங்களில் 1,063 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தயார் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள்
பெரம்பலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, கிருஷ்ணாபுரம், வேப்பூர், காரை ஆகிய வட்டார அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் ஏ பிரிவில் 20 ஆக்சிஜன் சிலிண்டர்களும், பி பிரிவில் 179 ஆக்சிஜன் சிலிண்டர்களும், சி பிரிவில் 21 ஆக்சிஜன் சிலிண்டர்களும், டி பிரிவில் 326 ஆக்சிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்தவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதை உறுதி செய்திடவும், வட்ட அளவில் துணை கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழுவும், குறுவட்ட அளவில் 11 சிறப்பு பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அபராதம் விதிக்கப்படும்
பொது இடங்களில் முககவசம் அணிய தவறும் பொதுமக்களுக்கு ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும். மேலும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணியாத பட்சத்தில், அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் திருமால், சப்-கலெக்டர் பத்மஜா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ஹேமசந்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அணில்மேஷ்ராம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிட செஞ்சேரியில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் விடுதியில் தயார் செய்யப்பட்டுள்ள கொரோனா கவனிப்பு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்