நெல்லையில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தொடங்கி வைத்தார்

நெல்லையில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-08 19:58 GMT
நெல்லை:
நெல்லையில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தொடங்கி வைத்தார்.

டிரோன்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உள்பட்ட பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது.

கண்காணிப்பு அலுவலர் 

இதை உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பின்னர் கண்காணிப்பு அலுவலர் அபூர்வா நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா 2-வது அலையை கருத்தில் கொண்டு தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆளில்லாத விண்வெளி எந்திரம் (டிரோன்) மூலம் மாநிலத்தின் தொழில் நுட்பத்திறனை நாட்டின் பிற பகுதிகளுக்கு நிரூபிக்க வேண்டிய சூழல் தற்போது உள்ளது.

ஏற்கனவே 25 டிரோன்களில் தமிழக அரசு முதலீடு செய்து உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் மிகக்குறைந்த அளவிலான கிருமிநாசினி தெளிக்கும் டிரோன் அதிக நெரிசல் மற்றும் அணுக முடியாத பகுதிகளில் மற்றும் சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 15 நாட்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

16 லிட்டர் கிருமி நாசினி

கொரோனாவை எதிர்த்து போராடும் இந்த டிரோன் உலகத்தரம் வாய்ந்தது. இது 16 லிட்டர் கிருமி நாசினியை தூக்கும் திறன் கொண்டது. பெட்ரோலின் உதவியுடன் பறக்கும், பேட்டரி மூலம் இயக்கப்படும் டிரோன்களை விட 6 மடங்கு அதிகமான பரப்பளவினை உள்ளடக்கிய திறன் கொண்டது. மேலும் குறைந்த செயல்பாட்டு செலவுகளுடன் இயங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செந்தில்குமார், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தாமரை செல்வி ஆகியோரின் தலைமையில் சார்ஸ்-கோவி2 வைரஸ்களை தணிப்பதற்கான ஆய்வும் நெல்லை மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரேமலதா, மாநகர் நல அலுவலர் சரோஜா உள்பட பலர் முககவசம், சமூக இடைவெளி கடைபிடித்து கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்